மூதூரின் முத்து திரு.அ.தங்கத்துரை
SANJEEVAN THURAINAYAGAM·THURSDAY, 26 MAY 2016
மூதூரின் முத்து திருவாளர் அ.தங்கத்துரை
(அ. அச்சுதன்
- சேனையூர் நிருபர்)

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வாலிப முண்னணி தலைவராகவும் அக்கட்சியின் மலையக தோட்டத்
தொழிலாளர்களின் தொழிற் சங்கமான இலங்கை தொழிலாளர் கழகத்தின் தலைவராகவும்,
நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவிகளை வகித்து வெற்றி கொண்ட தலைவராக பார்க்கப்படுகின்றவர்
தங்கத்துரை.
திருகோணமலை மாவட்டத்தில் மூதூர் பகுதியில் அமைந்துள்ள கிளிவெட்டி என்னும் கிராமத்தில் அருணாசலம் தம்பதியினருக்கு 1936.01.17 இல் மகனாக பிறந்த தங்கத்துரை தனது ஆரம்ப கல்வியை கிளிவெட்டி மகா வித்தியாலயத்தில் தொடர்ந்து 5ம் வகுப்பிற்கான
புலமைப்பரீட்சையில் சித்தியெய்தி மட்டக்களப்பு வந்தாறுமூலை மத்திய
மகா வித்தியாலயத்திலும் பின்னர் யாழ்ப்பாணம்
ஸ்ரான்லி கல்லூரியிலும் தமது கல்வியினைக்
கற்றார்.உயர் படிப்பை முடித்த பின்னர் இலங்கை நீர்ப்பாசனத் திணைக்களத்தில் எழுதுனராக நியமனம் பெற்ற தங்கத்துரை சோமபுரம், இரத்தினபுரி, கொழும்பு
முதலான பல இடங்களில் பணிபுரிந்துள்ளார்.
கொழும்பு நீர்ப்பாசனத் திணைக்களத்தில் பணியாற்றிய போது இலங்கையில் சிங்களம் மட்டும் சட்டம் கொண்டுவரப்பட்டதை அடுத்து 1970 ஆம் ஆண்டில் அரசசேவையில் இருந்து விலகினார்.
அரசசேவையில் இருந்து விலகிய அவர் தீவிர அரசியலில் பிரவேசித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியில் சேர்ந்து இரட்டை அங்கத்தவர் தொகுதியாக அப்போது இருந்த மூதூர் தொகுதியில் 1970ஆம் ஆண்டில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
1977 ஆம் ஆண்டில் மூதூர் தேர்தல் தொகுதி ஒன்றை அங்கத்தவர் தேர்தல் தொகுதியாக மாற்றப்பட்டது. சிங்கள மக்களுக்காக சேருவில என்ற புதிய தேர்தல் தொகுதி திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை
தேர்தல் தொகுதி தமிழ் மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட தேர்தல் தொகுதியாகவும் மூதூர் தேர்தல் தொகுதி முஸ்லிம் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தேர்தல் தொகுதியாகவும் சேருவில தேர்தல் தொகுதி. சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட தேர்தல் தொகுதியாகவும் இருந்தமையால் தங்கத்துரை அவர்கள் 1977 ஆம் ஆண்டு தேர்தலில் மூதூர் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட முடியவில்லை.
இந் நிலையில் 1978 ஆம் ஆண்டு அவரது சொந்த ஊரான கிளிவெட்டி கிராமத்தில் இடம் பெற்ற ஒரு வன் முறைச்சம்பவத்தில் இவரையும் தொடர்புபடுத்தி சந்தேகத்தின் பேரில் இவர் கைது செய்யப்பட்டு தமிழ் மக்களுக்காக திருகோணமலை மட்டக்களப்பு சிறைச்சாலைகளில் எட்டு மாதங்கள் சிறையிலிருந்து பின்னர் விடுதலையானார்.
1981 இல் மாவட்ட அபிவிருத்திச் சபை தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் போட்டியிட்டு திருகோணமலை மாவட்ட அபிவிருத்திச் சபை தலைவராக தெரிவு செய்யப்பட்டார். 1983 ஆம் ஆண்டில் இடம் பெற்ற இனக்கலவரங்களை அடுத்து மாவட்ட அபிவிருத்திச் சபை தலைவர் பதவியைத் துறந்த தங்கத்துரை சட்டக்கல்லுரியில் சட்டம் படித்து 1980ல் சட்டத்தரணியானார் .
1994 ஆம் ஆண்டு இடம்பெற்ற
நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக விளங்கும் மதிப்பிற்குரிய இரா.சம்பந்தன் ஐயாவை விட தங்கத்துரை அவர்கள் 2800 வாக்குகள் மேலதிகமாகப் பெற்று அன்று வெற்றியீட்டினார்.
தங்கத்துரை அவர்களின் அரசியல் இருப்பு திருகோணமலை மாவட்டத்தில் அறுகம்புல் வேர் போல் ஆழமுடையதாக காணப்பட்டது என திருகோணமலை மக்கள் இன்றும் நினைவுபடுத்துகின்றனர். தான் சார்ந்த மக்கள் மீதும், மண் மீதும் பற்றும், நாட்டமும் கொண்டவன். மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் இன்றும் மிகவும் முன் னுதாரணம் கொண்ட தலைவனாக தங்கத்துரை மக்களால் போற்றப்படுகின்றான். என்பதுதான் பெருமைப்படக் கூடிய விடயம் .
மாவட்டத்தின் அபிவிருத்தி,
சுகாதாரம், கல்வி, சமூக நலன் என பல் துறைகளிலும் பாரிய அபிவிருத்தியைக் கொண்டு வந்த ஒரு தலைவனாக இவர் விளங்கினார்.
1994 இல் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட காலப்பகுதியில் மாவட்டத்தின் சுகாதார சேவையை கிராமங்களுக்கு விரிவு படுத்தினார். உதாரணமாக கிளிவெட்டி,
மணற்சேனை, சம்பூர், செல்வநாயகபுரம், மற்றும் நிலாவெளி ஆகிய இடங்களில் புதிதாக வைத்தியசாலைகளை அமைத்து அம் மக்களின் சுகாதார நலன்களைப் பேணுவதற்கான வசதிகளை இலகுவாக்கினார்.
1971 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபையில் நடத்துனர். சாரதி நியமனங்களை கட்டைப்பறிச்சான், சேனையூர், பள்ளிக்குடியிருப்பு,
சம்பூர், தம்பலகாமம் பகுதிகளில் உள்ளவர்களுக்கு வழங்கினார் .அதே காலப்பகுதியில் திருகோணமலை மாவட்டத்தின் பல பகுதிகளிலுள்ள படித்த தமிழ்,
முஸ்லிம், இளைஞர், யுவதிகளுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்கி மக்களின் நன் மதிப்பை பெற்றார். இக் காலப்பகுதியில் இவரால் மூதூர் பிரதேசத்தில் காணி அபிவிருத்தி மேற்பார்வையாளர் பதவிகள் பலருக்கு வழங்கப்பட்டுள்ளன. ஏழை மக்களின் தந்தையாக மக்களால் போற்றப்பட்ட தங்கத்துரை கணவனை இழந்த குடும்பப் பெண்களுக்கு பொதுசன மாதாந்த உதவிப்பணத்தை அவர்கள் பெறுவதற்கு முன்னின்று பாடுபட்டார்.
கிராம மக்களின் விவசாய தேவைகளை கருத்திற் கொண்டு சம்பூர் முன்னம்பொடி வெட்டை இடங்களில் கமநல சேவை நிலையங்களை ஏற்படுத்தினார்.இவரது பதவிக்காலத்தில் மாவட்டத்தின். பல இடங்களில் புதிய பாடசாலைகள் தோற்றம் பெற்றன.
கல்வியில் தூரநோக்கு சிந்தனையுடன் செயற்பட்ட அமரர். திரு அ.தங்கத்துரை
கல்விக்காக அளப்பரிய சேவைகளை செய்திருந்தார் குறிப்பாக திருகோணமலையில் அமைக்கப்பட்டிருக்கும்
பல்கலைக்கழகம் இவருடைய சிந்தனையிலே பல சிரமங்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்டது எனினும்
திருகோணமலைக்கான ஆசிரியர்களை உற்பத்தி செய்யும் ஆசிரிய கலாசாலைகள் எவையும் இதுவரையில்
உருவாக்கப்படவில்லை இதனால் திருகோணமலை மாவட்டத்திற்குரிய ஆசிரியர்களின் தேவைகளை மட்டக்களப்புää
அம்பாறை மாவட்டங்களில் இருந்தே பெற்று பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. இங்கு ஆசிரிய
கலாசாலைகள் இருப்பதனால் இவ் இரு மாவட்டங்களிலும் ஆசிரியர்களின் உற்பத்தி அதிகரித்திருக்கிறது.
இவர் தொடர்ந்தும் பதவியில் இருந்திருப்பாரேயானால் இந்த தேவையும் பூர்த்தி செய்யப்பட்டிருக்கும்
என பல புத்திஜீவிகள் கருதுகின்றனர்.
மேலும் கிராமப்புற மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை விரிவு படுத்துவதற்காக பல பாடசாலைகளை தரம் உயர்த்தினார்.உதாரணமாக கட்டைப்பறிச்சான் விபுலானந்தா வித்தியாலயம், கிளிவெட்டி மகா வித்தியாலயம் மூதூர்
புனித அந்தோனியார் மகா வித்தியாலயம், என்பன இவரால் தரம் உயர்த்தப்பட்டது.
இவரால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும், பணிகளும், அர்பணிப்பு நிறைந்தவை. இந்த அர்ப்பணிப்பும் தீவிரமும், வேகமுமே இவரை ஏனையவர்களிடமிருந்து பிரித்துக் காட்டும் லட்சணமாக இருந்தன.
இவரது பதவிக் காலம் திருகோணமலை மாவட்ட வரலாற்றில் ஒரு பொற்காலமென்று கூறினால் அது மிகை நிறைந்த வார்தைகள் அல்ல இவரை, இவரது பணியை கௌரவப்படுத்தும் வகையில் கிளிவெட்டியில் தங்கநகர் என்ற கிராமமும் பள்ளிக்குடியிருப்பில் தங்கபுரம் என்ற கிராமமும் இவருடைய அளப்பரிய சேவையை பெயர் மூலம் கௌரவப்படுத்தி நிற்கின்றன.
திருகோணமலையில் மாணவர்களின் கல்வித்தரத்தினை மேம்படுத்துவதற்காக திருகோணமலை ஸ்ரீ சண்முக இந்து மகளிர் கல்லுரிக்கு முப்பத்தைந்து லட்சம் ரூபா செலவில் மூன்று மாடிகளைக் கொண்ட கட்டிடம் தங்கத்துரை அவர்களின ; முயற்சியினால் அமைக்கப்பட்டது. அக் கட்டிடத்தின் திறப்பு விழாவினை பாடசாலை நிர்வாகத்தினர் 05.07.1997 ஆந் திகதியன்று சம்பிரதாய பூர்வமாக திறந்து வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.
அவ் விழாவில் பங்கு கொள்வதற்காக அன்றைய தினம் மாலை 7.00 மணியளவில் அங்கு சென்று திருகோணமலை மக்களின் அன்பான வரவேற்;புடன் கட்டிட திறப்பு விழாவினை முடித்து விட்டு வீடு திரும்புவதற்காக வெளியே வந்து கொண்டிருந்தார். இச் சந்தர்ப்பத்தில் அவர் மக்களிடம் பிரியாவிடை கூறிவிட்டு அவருக்காக வாசலிலே காத்துக் கொண்டு நின்ற அவருடைய வாகனத்தில் ஏறுவதற்கு தயாரான போது இனந்தெரியாதோரால் கைக்குண்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டதும் அவர் வாகனத்திற்கு அருகாமையில் குண்டு அடிபட்ட நிலையில் வீதியில் வீழ்ந்தார்.
இவருடன் கல்லூரி அதிபர் உட்பட ஐவர் உயிரிழந்தனர். தமிழினத்தின் மூச்சே தன் மூச்சாகக் கொண்டிருந்த தங்கத்துரை எம்மை விட்டு நீங்கி 18 வருடங்கள் கடந்து விட்டாலும் அவருடைய சேவைகள் இன்றும் அவரை நினைவுபடுத்தி நிற்கின்றன
No comments:
Post a Comment