Sunday 10 July 2016

நீங்காத நினைவுகள்!

மறைந்த அருணாசலம் தங்கத்துரை பா.உ அவர்களைப்பற்றிய எனது நீங்காத நினைவுகள்!
தமிழர் விடுதலைக் கூட்டணியின் திருமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும், த.வி. கூட்டணியின் அமைப்பு நிர்வாகச் செயலாளரும், தமிழரசுக் கட்சியின் தலைவரும், திருகோணமலை சிவானந்த தபோவன சிறுவர் இல்லத்தைப் பரிபாலிக்கும் நாகரத்தினம்பிள்ளை தங்கம்மாள் நம்பிக்கை நிதியத்தின் பிரதான நம்பிக்கைப் பொறுப்பாளரும் – பொருளாளருமான மறைந்த அருணாசலம் தங்கத்துரை பா.உ அவர்களைப்பற்றிய எனது நீங்காத நினைவுகள்.
ஜூலைமாதம் 5ஆந்திகதி – சனிக்கிழமை இரவு 8.05 மணி ரிஎன்எல்(TNL) தொலைக்காட்சியில் ராமாயணம் திரையிடப் படுகிறது. சிவதனுசு வில் ஒடிக்கப்பட்ட செய்தி, ராமர் சீதை திருமணம் பற்றிய செய்தி – இவற்றைத் தாயிடம் கூற பிள்ளைகள் புதிர் போடுகிறார்கள்! என்ன செய்தி என்று அறிவதில் பதட்டமான ஒரு நிலையில் – தொலைபேசியில் கஹவத்தையிலிருந்து நண்பர் ஒருவர் திருமலை தந்திரதேவா சுவாமி நாளை ஞாயிற்றுக்கிழமை பலாங்கொடை, நீலகாமம், தலுக்கல்லைப் பகுதிகளுக்கு வருகிறார். கட்டாயம் வரவேண்டும் என்ற அழைப்பு – சரி வருகிறேன் என்று கூறி முடிக்கு முன்பே மற்றைய தொலைபேசியில் திரு. தங்கத்துரை கொல்லப்பட்டார் என்ற அதிர்ச்சிச் செய்தி வரவும் மறுதொலைபேசியில் வரமுடியாது – அதிர்ச்சியான செய்தி என்று கூறித் தொடர்பைத் துண்டித்துக் கொண்டு திருமலைக்குத் தொடர்பை ஏற்படுத்தி விசாரித்தால் செய்தி ஊர்ஜிதப்படுத்தப்பட்டது. இதனிடையில் 9.00 மணி இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செய்தியிலும் தகவல் வெளியிடப்பட்டது. திரு. ஜோசப் பரராஜசிங்கமும் பாரியாரும் கூட்டணி அலுவலகத்திற்கு வந்து தலைவர் மு. சிவசிதம்பரம் அவர்களைச் சந்தித்து இதுபற்றி நீண்டநேரம் கதைத்தவண்ணமிருந்தனர். ஏற்கனவே அனுபவத்தைப் பெற்று இவ் இம்சையின் கொடுமையை உணர்ந்த தலைவர் சிவா ஐயா கண்கள் குளமாக வேதனையுடன் மௌனமாக இருந்தார். பல வெளிநாடுகளிலிருந்தம் செய்தி அறிந்து பலர் இரவிரவாகத் தொடர்பு கொண்டவண்ணம் இருந்தனர்.
3.7.1997 சென்னையிலிருந்து வந்த திரு. தங்கத்துரை பா.உ அவர்கள் 4.7.97 வெள்ளிக்கிழமை தொலைபேசிமூலம் தொடர்பு கொண்டு எம்முடன் பேசினார்கள். 5.7.97 சனிக்கிழமை காலையில் வாகனத்தில் திருமலை சென்று அன்றிரவு ஸ்ரீ சண்முகா இந்த மகளிர் கல்லூரியின் புதிய கட்டிடத் திறப்புவிழாவின் நிறைவில் குண்டுத் தாக்குதலில் பலியானார். கூடவே அவருடன் அதே கல்லூரியின் அதிபர் திருமதி. இராஜேஸ்வரி தனபாலசிங்கம், அதே கல்லூரியின் பாடசாலை அபிவிருத்திச் சபை உறுப்பினர் திரு. பெ.சி. கணேசலிங்கம், திருக்கடலூர் நாமகள் வித்தியாலய அதிபர் திரு. சி. ஜோசப், கொழும்பு அதிபர் திரு. கா. சீவரத்தினம் ஆகியோர் கொல்லப்பட்டனர். படுகாயமடைந்த பொறியியலாளர் திரு. வே. ரட்ணராஜா அவர்கள் இரண்டு நாட்களின் பின்னர் மரணமடைந்தார். கல்விக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு சமுதாயம் ஒருபோதும் இப்படிப்பட்ட மிருகத்தனமான படுகொலைகளை ஏற்க முன்வரமாட்டார்கள்.
எளிமை அன்பு பொறுமை உண்மை நியாயம் துணிவு இரக்கம் என்பவற்றிற்கு இலக்கணமாக சகிப்புத் தன்மைக்கு உதாரண புருஷராக எந்நேரமும் புன்சிரிப்புடன் இளவயதினர் அனைவரையும் தம்பி என்று அன்பு ததும்ப அழைக்கும் திரு. அ. தங்கத்துரை அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் எனது எண்ணங்களால் நம்பக்கூடிய ஒன்றாக இதுவரை புலப்படவில்லை.
கடந்த 8 வருடங்களாக அவருடன் கொண்டிருந்த அன்புப் பிணைப்பு ஏதோ வருடத்திற்கோரிருதடவை வழமைபோல இந்தியா போய் வருபவர் தற்போதும் இந்தியா போய்விட்டார். நிச்சயம் திரும்பி வருவார் என்றே எண்ணத் தோன்றுகிறது! எந்நேரமும் எம்முடனேயே இருக்கின்ற உணர்வு – என்னைவிட்டு இன்னும் மறையவில்லை.
உயரத்தில் சற்றுக் குறைவானாலும் – நிமிர்ந்த நடையும் மேவியிழுத்த சிகையும் கூர்மையுடன் ஆழம் பார்க்கும் விழியும் நெற்றிப்புரவ அசைவுகள் கொண்ட பேச்சும் எந்நேரமும் முறுவல் பூத்த இன்முகமும் எளிமையும் காந்தீயமும் நிறைந்த – 4 முழ வேட்டியும் அரைக் கைச் சேட்டும் அணிந்த உருவமும் – சிந்தனையிலிருக்கும்போது இமைக்காத விழியும் மௌன நிலையும் காலையில் எழுந்ததும் தனக்கே உரித்தான ஒரு தடித்த ம்..ம்.. என்ற செருமலும் (தான் எழுந்துவிட்டதை எமக்குத் தெரிவிக்கும் ஒரு அறிவிப்பு) சிலரைத் தொலைபேசியில் அழைத்தபின் சிரிக்கும் பெரியதொரு அஹ்..ஹ்..ஹா என்ற அசுரச் சிரிப்பும் நெருங்கிப் பழகுவோர் சிலருடன் அன்பாக மச்சான் என்றழைக்கும் விதமும் – இவை என்றுமே அவரை எண்ணத் தோன்றியபடி இருக்கவே செய்யும்.
1989ஆம் ஆண்டு ஜூலை 13இல் படுகொலை செய்யப்பட்ட திருவாளர்கள் அ. அமிர்தலிங்கம் வெ. யோகேஸ்வரன் ஆகியோரின் மறைவுக்குப் பின் எங்களுடனேயே வந்து தங்கியிருந்து – தகர்த்து நொருக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியை தூக்கி நிலை நிறுத்திய – ஒரு கற்றூணாக அர்ப்பணிப்புச் செய்த அவரின் தன்மையை எண்ணிப் பார்க்கின்றேன். அன்று தொட்டு படுகொலைசெய்யப்பட்ட நாள்வரை தனது பணியை அமைதியாக – சலசலப்பில்லாமல் – விளம்பரம் செய்யாமல் நிதானமாகக் கூடிய அக்கறையுடன் முன்னெடுத்துச் சென்றதை நினைவுகூருவது என் கடமையாகிறது!
வடக்குக் கிழக்குப் பகுதிகளில் குறிப்பாக திருமலை மாவட்டத்தில் சிறப்பாகப் பின்தங்கிய பிரதேசங்களுக்கத் தன்னாலான அனைத்தையும் இரவு பகல் பாராது கடமையுணர்வும் – பற்றுறுதியும் கொண்டு செயற்கரியனவற்றைச் செய்தார். அதனால்தான் 1970ஆம் ஆண்டு மூதூர்த் தொகுதியில் இரண்டாவது அங்கத்தவராகத் தெரிவு செய்யப்பட்டபோது பெற்ற வாக்குகளை விட(19,787) 24 ஆண்டுகளுக்குப் பிறகு திருமலை மாவட்டத்தில் 1994ஆம் ஆண்டில் கூடிய விருப்புவாக்குகளைப் பெற்றவர் என்ற பெருமையையும்(22,409) பெறுகின்றார். 1981 மாவட்ட அபிவிருத்திச் சபைத் தேர்தலில் திருமலை மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி பெற்ற வாக்ககள் 44,692. திரு. தங்கத்துரை அவர்களே சபைத் தலைவராக இருந்தார்.
1991ஆம் ஆண்டு நாள் சரியாக எனக்கு ஞாபகமில்லை. வடக்குக் கிழக்குப் பகுதியின் புனரமைப்பு புனர்நிர்மாணங்களுக்காக வெளிநாட்டு உதவி ஒன்று கிடைக்கவிருந்த சமயத்தில் ஒரு பெரிய திட்டம் (Project ) ஒன்றை நள்ளிரவு தாண்டிய நேரத்தில் ஏறக்குறைய 2.30 மணிவரை தனியாக இருந்து ஆங்கிலத் தட்டச்சில் அதைத் தயார் செய்து முடித்ததை நினைவுக்குக் கொண்டுவர விரும்புகின்றேன். அவரது வழிகாட்டலில் சில வரைபடங்களை நாமே கீறிக் கொடுத்தோம். நானும் எனது நண்பன் சபாபதி அவர்களும் அதைச் செய்து முடித்தோம். (இக்கட்டுரை எழுதியது 1997 காலப்பகுதியில் – அவர் பதுளை பிரதேச சபையின் உறுப்பினராக இருந்தார் – 1990 களில் நாம் கொழும்பில் இந்து சமய ஒற்றுமைப் பேரவையை நடத்திய காலங்களில் அவர் அதன் பொருளாளராக இருந்தவர் மலையகத்தைச் சேர்ந்த அவர்; எமது மறைந்த தலைவர்கள் அனைவருடனும் அன்னியோன்னியமாக பழகியதையும் இன்று நான் சுட்டிக்காட்டுவது பொருத்தமாயிருக்கும் என நினைக்கின்றேன்.) வடக்கு கிழக்கு நெடுஞ்சாலைகளில் செப்பனிடப்படவேண்டிய பகுதிகள், மின்சாரம் வழங்க வேண்டிய பகுதிகள், பாடசாலைகளுக்கான புதிய கட்டடங்கள், விஞ்ஞான ஆய்வு கூடங்கள், மாணவர் ஆசிரியர் விடுதிகள், திருத்தப்படவேண்டிய குளங்கள், விளையாட்டு மைதானங்கள், குடிநீர் வசதிக்கான கிணறு அமைத்தல் போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை.
கல்விக்கும் கல்வி வளர்ச்சிக்கும் – ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புதல் பாடசாலை வளங்களை அதிகரித்தல் போன்ற சகல பணிகளிலும் அவர் கூடிய அக்கறை காட்டிவந்தார்.
கைது செய்யப்பட்டுக் காணாமற் போனோர் பற்றிய விபரங்களைப் பெற்று அவற்றைத் தொடர்புடைய ஆணைக்குழு, பாதுகாப்பு அமைச்சு, மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை இவர்களுடன் தொடர்பு கொண்டு சம்பந்தப்பட்டவர்களை விடுவிக்க அல்லது வழக்குகள் ஒழுங்கு செய்து அவர்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணப் பெரிதும் உழைத்தார். எமது அலுவலகத்தில் இந்தப் பத்திரங்களின் பிரதிகள் இன்றும் அவரது மனித உரிமை மீது கொண்ட மதிப்பை உணரச் சான்றுகளாக உள்ளன.
அவருடைய தேசிய அடையாள அட்டையில் தொழில் என்ற பகுதியில் கமம் என்று இருக்கக் காணப்பட்டது. நான் ஏன் நீங்கள் நீர்ப்பாசன இலாகா உத்தியோகத்தர் அல்லது சட்டத்தரணி என்று குறிப்பிட்டிருக்கலாமே என்று ஓர் நாள் சொன்னதற்கு – அது எமது பரம்பரை பரம்பரையான தொழில் அதை நாம் ஏன் குறிப்பிடுவதில் தயக்கம் காட்ட வேண்டும் என்று சொன்னார்.
மிகவும் எளிமையும் அன்பும் கொண்ட அவர் 1994இல் தேர்தலில் வெற்றிபெற்றபின் 1995 மார்ச்சில் மாதிவெலையிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் விடுதிக்குச் சென்றார். அதுவரை சுமார் 6 வருடங்களாக நாமே அவருக்கும் ஏனைய அலுவலகத்தில் தங்கியிருந்த தலைவர் மு. சிவசிதம்பரம் அவர்களுக்கும் மூத்த துணைத்தலைவரான வீ. ஆனந்தசங்கரி அவர்களுக்கும் தேனீர் தயாரிப்பதிலிருந்து – கடையில் போய் சாப்பாடு வாங்கிக் கொடுப்பதுவரை நாமே செய்தோம். வீட்டில் சமையல் செய்ய ஒருவர் இருந்தபோதும் பெரும்பாலும் கற்பகத்திலும், சாந்தி விஹாரிலும் – கிறீன்லன்ட் மற்றும் வெள்ளவத்தை மயூரியிலும்தான் சாப்பாடு. சாப்பாட்டு விடயத்தில் இதுதான் வேண்டும் என்று ஒரு நாளும் யாரும் சொன்னது கிடையாது. இதில் அமரர் தங்கத்துரை அவர்களுக்கு வெறும் தேனீர் தான் சீனியில்லாமல் கொடுப்பது வழக்கம். மத்தியகுழுக் கூட்டங்களின்போது (ஒவ்வொரு கூட்டங்களும் பலமணிநேரம் நடைபெறும்) காலையில் 10.00 மணிக்கு தேநீர் – மதிய உணவு பின்னர் மாலையில் வடையுடன் தேநீர் ஓரிரு தடவைகள் இரவு உணவும் கொடுக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினராகிய பின்னரும் முன்னரைப் போலவே நடந்து தனியாகவும் – பஸ்வண்டிகளிலும் பிரயாணம் செய்வார். தனது பாதுகாப்பைப்பற்றி சிறிதேனும் அவர் கவலைப்படவில்லை. நீதி நியாயம் உண்மை உள்ளவன் ஏன் கவலை கொள்ள வேண்டும் – அவனுக்கு என்ன பயம் என்று அடிக்கடி சொல்லுவார். ஒரு தடவை திருமலை செல்லப் புகையிரத நிலையம் போவதற்கு 138 இலக்க பஸ் வண்டியில் அவர் முன்பு ஏற பின் ஒரு பாதுகாப்பு உத்தியோகத்தர் ஏற அவரை வழியனுப்பி வைத்ததும் மறக்க முடியாத சம்பவம்.
அவரது அறையில் – காலைக்கடன்களை முடித்துவிட்டு ஏறக்குறைய அரை மணிநேரம் தியானத்தில் அமர்வார். காலையில் வாக்கிங்போகும் அமைச்சர் மஜீத் நேரே அவரது அறைக்குள் போய் அவர் தியானத்திலிருந்தால் பரவாயில்லை மேணை! அவர் தியானம் முடிந்த பிறகு கதைக்கலாம் என்று சொல்லி அவருக்கு முன்பாக கதிரையில் அமர்ந்த அவரையே பார்த்தபடி இருப்பதும் மறக்கமுடியாது.
தனது தந்தையார் அருணாசலம் அவர்கள் இந்தியாவிலிருந்து வந்து ஓரிரு நாட்கள் எமது அலுவலகத்தில் தங்கியிருந்த பின் அவரை திருமலைக்கு அனுப்பி வைப்பதற்காக அதிகாலை புகையிரத நிலையத்துக்குச் சென்று வழியனுப்பிய அன்று அவரது நடவடிக்கைகள் மிக வித்தியாசமாக இருந்தது! புகைவண்டியிலிருந்த பலரும் அவரின் கையைப் பிடித்து இழுத்து தங்களுடன் வரும்படி கேட்டு தொல்லை கொடுத்தபோது வேலைகள் நிறைய இருக்கின்றன. பின்பு கட்டாயம் வருவேன் என்று சொல்லி அவர்களுக்கு அருகில் உட்கார்ந்து பல நிமிடநேரம் சிரித்து அளவளாவியதையும் மறக்க முடியவில்லை. அவருக்கு முஸ்லிம் சிங்கள நண்பர்கள் எனப் பலர் இருந்தனர். சகலரையும் மதித்து அவரவர் கொள்கை – இலட்சியங்களுக்கு இயைந்த போக்கினைக் கடைப்பிடிக்கும் அவரது தாராள குணம் ஒரு தனி மரியாதையை ஏற்படுத்தியிருந்தது. தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த காரணத்தினால் அவர் – நீதி கோருபவன் தான் நீதி வழங்க ஆயத்தமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படைக் கருத்தை எமக்கு அடிக்கடி ஞாபகப்படுத்துவார்.
(மீதி பின்னர்.
தங்க முகுந்தன்

No comments:

Post a Comment